search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை"

    • 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.
    • மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.127 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் சாந்திமலர் வரவேற்றார்.

    புதிய கட்டிடத்தில் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கல்லூரிகளில் மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதியை ஒதுக்கி பணிகளை நிறைவுபடுத்தியதால் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.நாமக்கல், ஊட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் அந்த பகுதிகளில் 500 மற்றும் 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.

    இந்த மருத்துவமனை 500 படுக்கைகளுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது. நாளொன்றுக்கு புறநோயாளிகளின் எண்ணிக்கை 2,700 பேர், உள்நோயாளிகளாக 700 பேர் வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.98 கோடியே 88 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.

    திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசிடம் அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆண்டுக்கு 100 பேர் பயிற்சி முடிக்கும் வகையில் ஏற்படுத்த கூறினார்கள். இதுதொடர்பாக மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினோம். 30 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க கோரினோம். 11 இடங்களில் புதிதாக செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைய உள்ளது. திருப்பூரில் 100 மாணவியர் சேர்க்கையுடன் செவிலியர் பயிற்சி கல்லூரி மிக விரைவில் அமைய உள்ளது. அந்த கல்லூரிக்கு ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை என்பது பாராட்டுக்குரியது. வருமுன்காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைத்து வருகிறது. திருப்பூரில் பொதுமக்கள் பங்களிப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகிறார்கள். விரைவில் அரசின் பங்களிப்பு நிதியுடன் ரூ.30 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளது' என்றார்.அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார–கள். முடிவில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் நன்றி கூறினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ம.தி.மு.க. அவைத்தலைவரான சு.துரைசாமி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) தலைமை பொறியாளர் இளஞ்செழியன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்ட நிர்வாகி திலகராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலா–ளர் ககன் தீப் சிங்பேடி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    புதிய கட்டிடத்தை திறந்து மருத்துவ சேவையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் சுப்பராயன் எம்.பி., க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தேவகோட்டையில் தையல் கடை வைத்து உள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 23). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாமரைச் செல்வியை பிரசவத்திற்காக கடந்த 9-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அன்று மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு தாமரைச்செல்வி திடீரென இறந்தார். இதையடுத்து டாக்டர்களின் அலட்சிய போக்கால்தான் அவர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் தாமரைச்செல்வியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.
    ×